சென்னை
வரும் மக்களவை தேர்தலில் பாமக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு அதே சின்னம் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே சின்னங்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுவது வழக்கமாகும். அதற்காக தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வைத்துள்ளது.
அந்த விதிமுறைகள் பின் வருமாறு :
”ஒரு கட்சியின் அங்கீகாரம் தொடர வேண்டும் எனில் அந்த கட்சி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3% வெற்றி பெற வேண்டும். மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு 25 தொகுதிகளில் 1 தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ”
தற்போது பாமக தனது கட்சி சின்னமான மாம்பழத்தையும் மதிமுக தனது சின்னமான பம்பரத்தையும் இந்த மக்களவை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்க உள்ளன.
இது குறித்து முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர், “வரும் மக்களவை தேர்தலில் பாமக மற்றும் மதிமுக வுக்கு தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மீண்டும் அதே சின்னங்கள் பெறுவதில் கடும் சிக்கல்கள் உள்ளன.
ஏற்கனவே இந்த கட்சிகளை தேர்தல் குறித்த கூட்டங்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு தேர்தல்களில் ஆணையத்தின் விதிமுறைப்படி தேவையான வாக்குகள் இந்த இரு கட்சிகளுக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்சிகள் சின்னம் ஒதுக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு இந்த சின்னம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அதே கால கட்டத்தில் வேறு யாராவது சுயேச்சைகள் இதே சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுத்தால் இந்த கட்சிகளுக்கு அது மேலும் சிக்கலை அளிக்கும். “ என குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிகவின் நிலையும் சந்தேகமாகவே உள்ளது. கடந்த 2011 ஆம் வருடம் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் இந்த கட்சி வெற்றி பெற்றதை அடுத்து மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால் 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் 5.19% வாக்குகளையும் 2016 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலில் 2.39% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.