திருபுவனம

பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இணையாமல் தேமுதிக இழுபறி நிலையில் உள்ளது. பல எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனங்கள் எழுப்பி வருகின்றன.

இந்த கூட்டணி குறித்து பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சமீபத்தில் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்றம் செய்ய வந்தவர்களை தடுத்த பாமக செயலாளர் ராமலிங்கம் கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த பொன் ராதாகிருஷ்ணன் அவர் இல்லம் சென்ற போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர், “பாஜக-பாமக -அதிமுக கூட்டணிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என நம்புகிறேன். மத்தியில் மீண்டும் மோடியாக வர பாஜக இந்த கூட்டணியை அமைத்துள்ளது. மோடிக்காக பாஜக எந்த ஒரு ஊழல் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் இவ்வாறு விமர்சித்துள்ள்து கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா, “திமுக – காங்கிரஸ் என்பது ஊழல். ஆனால் பாஜக – அதிமுக என்பது முன்னேற்றம்” என கூறியது குறிப்பிடத்தக்கது