இஸ்லமாபாத்:
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை பாகிஸ்தானுடன் இணைந்து தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை (FATF) அறிவித்துள்ளது.
புல்வாமாவில் தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படைவீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாரிஸில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பதில் பாகிஸ்தானின் செயல்பாடு திருப்பதிகரமாக இல்லை.
அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் நிதியுதவி பெறுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள பாகிஸ்தான் தவறிவிட்டது.
எனவே, அந்நாட்டுடன் இணைந்து தீவிரவாத செயலுக்கு நிதியுதவி அளிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் மே மாதத்துக்குள் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வருவதை தடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானின் மேற்கத்திய நட்பு நாடுகளும்கூட, பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.