சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று காலை  நடிகர் ரஜினிகாந்த்  திடீரென சந்தித்து பேசியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதிலும், தொகுதி பங்கீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்ட நிலையில், தமகா, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

அதேவேளையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட சிலகட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள்  தொடர்ந்து வருகின்றன.

இதற்கிடையில், விஜயகாந்தின்  தேமுதிகவை தங்கள் பக்கம்  இழுக்க அதிமுக மற்றும் திமுக கட்சிகள்  வலைவீசி வருகின்றன.  இரு கட்சிகளுடன் தேமுதிக  திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பாஜக தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதுபோல திமுக தரப்பிலும் பேசப்பட்டு வந்த நிலையில், தேமுதிகவின் நிபந்தனைகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நடிகர் கமல்ஹாசன் 3வது அணி அமைய இருப்பதாக நேற்று கொளுத்திப் போட்டார். இதையடுத்து அரசியல் களம் மேடும் சூடுபிடித்து உள்ளது. தேமுதிகவை இழுக்க அதிமுக, திமுக கூட்டணிகள் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விஜயகாந்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் இன்று காலை விஜயகாந்தை ரஜினிகாந்த் சந்தித்து பேசியது தமிழக அரசியலில்  மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.