லக்னோ
இப்போது நாட்டுக்கு புல்லட் துளைக்காத அங்கி தான் தேவை எனவும் புல்லட் ரெயில் தேவை இல்லை எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் ஆளும் பாஜக சற்றே பயத்தில் உள்ளதாக அம்மாநில அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று தனது கட்சி அலுவலகத்தி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.
அப்போது அகிலேஷ் யாதவ், “புல்வாமா தாக்குதலை நடத்திய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட அரசுடன் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. தற்போது உளவுத்துறையின் கவனக் குறைவால் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்த உளவுத்துறை துறையின் கவனக் குறைவுக்கு யார் பொறுப்பு ஏற்பாற்கள்? அரசின் கீழ் உள்ள உளவுத்துறையின் கவனக் குறைவுக்கு அரசு மட்டுமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஆட்சிக்காலம் முடியும் வரையில் உளவுத்துறையை ஏன் பாஜக அரசு சீர் செய்யாமல் இருந்துள்ளது? தற்போது நாடு தேர்தலை சந்திக்கும் நேரத்தில் எல்லைப்புற பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும். நாடே இந்த விவகாரத்தில் படை வீரர்களுக்கு ஆதரவாக இருக்கும் போது அரசு என்ன செய்ய உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.
நாட்டில் அனைத்துக் கட்சிகளும் துக்கம் அனுசரிக்கும் போது பாஜகவினர் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியா? ஓவ்வொரு நாளும் நமது வீரர்கள் மரணம் அடைவதாக செய்தி வரும் நிலையில் 3 நாட்கள் துக்கம் மேலும் தொடருமா? பாஜக அரசியல்வாதிகள் ஒவ்வொரு வீரரின் இறுதிச் சடங்கிலும் புன்னகை முகங்களுடன் எத்தனை நாட்களுக்கு கலந்துக் கொள்ள உத்தேசித்துள்ளனர்?
நாட்டின் பாதுகாப்புக்கு இந்த அரசு இனியாவது ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? நாடு தற்போதுள்ள நிலையில் நமக்கு புல்லட் துளைக்காத அங்கிகள் தான் தேவை. புல்லட் ரெயில் தேவை இல்லை. இதை உணர்ந்து இந்த பாஜக அரசு இனியாவது நடவடிக்கைகள் எடுக்குமா?” என சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்.