ஐதாபாத்
புல்வாமா தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முழுக் காரணம் என முன்னாள் இந்திய உளவுத்துறை தலைவர் விக்ரம் சூட் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மவட்டத்தில் 70 வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்த சிஆர்பிஎஃப் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத குழு தற்கொலப்படை வீரர் தாக்குதல் நடத்தினார். வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஸ்கார்ப்பியோவில் வந்த அந்த நபர் சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த வாகனத்தில் மோதியதில் 44 வீரர்கள் மரணமடைந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர்.
முன்னாள் இந்திய உளவுத்துறை தலைவரான விக்ரம் சூட் ஐதராபாத்தில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் தனது உரையில், “காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு முழுக் காரணம் பாதுகாப்புக் குறைபாடு ஆகும். எந்த ஒரு தீவிரவாத அல்லது தற்கொலைப்படை தாக்குதலும் பாதுகாப்பு குறைபாடு இல்லாமல் நடக்க முடியாது. இதில் எங்கு என்ன தவறு நடந்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.
இவர்கள் சொல்வதைப் போல இந்த தாக்குதலில் ஒரு மனிதனை விட அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். வெடிப்பொருட்களை ஒருவன் கள்ளச் சந்தையில் வாங்கி இருப்பான். இன்னொருவன் அதை ஒருங்கிணைத்து வெடிகுண்டாக மாற்றி இருப்பான். அந்த காரை வேறொருவன் வாங்கி இருப்பான்.
எல்லாவற்றையும் விட சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த வாகன நடமாட்டம் குறித்த அனைத்து தகவல்களும் அவர்களுக்கு துல்லியமாக தெரிந்து இருக்கிறது. இவை அனைத்தும் பாதுகாப்பு குறைபாடுகளால் தான் நடந்துள்ளது “ என தெரிவித்துள்ளார்.