பெங்களூரு

ட்டப்பேரவை உறுப்பினர் மகனுடன் பேரம் பேசிய ஆடியோ டேப் விவகாரத்தில் சிக்கி உள்ள பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 8 ஆம் தேதி அன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டார். அதில் பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவும் குர்மித்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகணகவுடா மகன் சரனகவுடாவும் பேச்சியதாக கூறப்படுகிறது. அந்த ஆடியோ பதிவில் சரனகவுடாவிடம் அவர் தந்தை கர்நாடக அரசை கலைக்க உதவினால் லஞ்சம் அளிப்பதாக வாக்குறுதி அளிப்பதாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

தாம் சரனகவுடாவை சந்திக்கவில்லை என முதலில் மறுத்த எடியூரப்பா அதன் பிறகு தான் சரனகவுடாவை சந்தித்ததை ஒப்புக் கொண்டார். தாங்கள் இருவரும் பேசியது தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள்தாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் இது குறித்து விசாரணை செய்ய ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். சபாநாயகருக்கு ரூ.50 கோடி பணம் அளிக்க உள்ளதாக அந்த ஆடியோவில் எடியூரப்பா கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் ராய்ச்சூர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது அளிக்கப்பட்ட லஞ்சப் புகாரில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டி எடியூரப்பா தாம் கைது செய்யப்படலாம் என்பதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் சிலருடன் இணைந்து முன் ஜாமீன் கோரி மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எடியூரப்பாவுகும் அவரது கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான சிவானகவுடா மற்றும் பிரீதம் கவுடா, எடியூரப்பாவின் ஆலோசகர் மரக்கல் ஆகியோருக்கு ரூ. 1 லட்சம் பிணையுடன் முன் ஜாமீன் அளித்தது. மேலும் இவர்கள் சாட்சியங்களை கலைக்கக் கூடாது என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.