வர்மா திரைப்பட சிக்கல் அத்தனை சுலபத்தில் தீரும் என்று தோன்றவில்லை.
‘’நாயர் பிடித்த புலி வால்’’ கதையாக –
வர்மா தயாரிப்பாளர் –அந்த படத்தை விடவும் முடியாமல், தொடரவும் வழி தெரியாமல் தவிக்கிறார்.
’அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தின் கதையை ‘வர்மா’ என்ற பெயரில் ‘ரீ-மேக்’செய்தார் –பாலா. காதலர் தினத்துக்கு படம் வெளியாக இருந்த நிலையில்- படத்தை பார்த்த தயாரிப்பாளர் ‘’ஒரிஜினலில் இருந்த காட்சிகள் தமிழில் இல்லாததால் –அர்ஜுன் ரெட்டியை வேறு ஒருவர் இயக்கத்தில் படமாக்க போகிறேன்’’ என்று வீராவேசமாக அறிவித்து விட்டு-வர்மாவை குப்பை கூடையில் கடாசி விட்டார்.
‘’பாலா பயன்படுத்திய ஆட்களில் -ஹீரோ துருவ் –மட்டுமே புதிய படத்தில் இருப்பார். மற்ற அனைவருமே வேறு ஆட்கள் ‘’என்றும் அறிவித்து விட்டு வேறு ஆட்களுக்கு வலை வீசினார்- தயாரிப்பாளர்.
ஒரிஜினல் ரெட்டியின் இயக்குநர் சந்தீப் வங்கா- வேறு வேலையில் ‘பிஸி’.
அதனால் தமிழ் இயக்குநர்களுக்கு தூண்டில் போடப்பட்டது.முதலில் கவுதம் மேனன் என்றார்கள். அவர் மறுத்து விட்டார்.
இந்த படத்தை ஒத்துக்கொண்டால்- பாலாவின் பகையை சம்பாதிக்க நேரிடும் என்கிற தயக்கத்தால் மேனன் மறுத்து விட்டார்.
பாலாவை அவமானப்படுத்தியதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் இயக்குநர்களையும் அந்த தயாரிப்பாளர் –களங்கப்படுத்தி விட்டதாக இயக்குநர்கள் சங்கம் கருதுகிறது..
கவுதம் மேனனை போலவே வேறு சிலரும்-இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டனர்.
கடைசியாக ;அர்ஜுன் ரெட்டியின் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய –கிரிசய்யா என்பவரை அணுகி உள்ளனர்.
அவர் ஒத்துக்கொள்ளலாம்.
ஆனால் விவகாரம் வேறு வடிவில் உருவெடுத்துள்ளது.
வர்மாவில் பணியாற்றிய (துருவ் நீங்கலாக ) அத்தனை ஆட்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
‘’எங்களை எதற்காக படத்தில் இருந்து தூக்கினீர்கள்?’’என்பது அவர்கள் எழுப்பும் கேள்வி.
இந்த கேள்வி –கதாநாயகியிடம் இருந்து முதலாவதாக எழுந்துள்ளது.
வர்மாவின் கதாநாயகி- மேகா சவுத்ரி. அவருக்கு பதிலாக-பனிதா சந்து எனற இந்தி நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார் மேகா.
‘’வர்மா கை விடப்பட்டு விட்டதா? டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும் மோதலா? எனக்கு எதுவுமே தெரிவிக்கப் படவில்லை’’என்று விசும்பும் மேகா- தான் மாற்றப்பட்டதால் பிரச்சினை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டும் ஒரு இயக்குநர்’ ‘’வேற்று மொழி படத்தை தமிழில் படமாக்கும் போது ஒரிஜினலை அப்படியே காப்பி அடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்தே தீர வேண்டும்.
உதாரணமாக தெலுங்கு ‘ஒக்குடு’வை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை கில்லியாக தரணி ரீ-மேக் செய்த போது- காட்சிகளை நிறைய மாற்றி இருந்தார். அதனால் தான் கில்லி பெரும் வெற்றி பெற்றது’’ என்கிறார் அவர்.
–பாப்பாங்குளம் பாரதி