சேலம்
பாமக தலைவர் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாய் கல்யாணி மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு மறைவுக்கு பின் பாமகவில் கடும் குழப்பம் ஏற்பட்டது. பாமக தலைவர்களான ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி ஆகியோர் மீது காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். குருவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றியதாகவும் அதனால் தான் அவர் மரணம அடைந்ததாகவும் தொடர்ந்து அவ்ர் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.
நேற்று காடுவெட்டி குருவின் தங்கை மீனாட்சி, அவருடைய அத்தை மகன் மணி, மருமகன் மனோஜ் உள்ளிட்ட குடுமத்தினர் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ”காடுவெட்டி குரு வன்னியர் நலனுக்காக 40 ஆண்டுகள் உழைத்துள்ளார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 முறை கைதுசெய்துள்ளனர்.
அவர் பாமக வன்னியர் நலனுக்காக பாடுபடும் என நம்பினார். ஆனால் அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பதாக கூறிய பாமகவினர் அவ்வாறு செய்யாமல் அவரைக் கொன்று விட்டனர். எங்கள் குடும்பத்தை அடியோடி அழிக்க முயற்சிகள் நடக்கின்றன. அவர் பிறந்த நாளன்று அவர் சமாதியில் விளக்கேற்றி வணங்கவும் எங்களை அனுமதிக்கவில்லை.
அவர் மகன் கனல் அரசன் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதாக இருந்தார். ஆனால் அவர்மீது பல கொலை மற்றும் கொள்ளைக் குற்றங்கள் பொய்யாக சுமத்தப்பட்டுள்ள்து. அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் அவர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாமக தொடர்ந்து அதிமுக அல்லது திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்ததால் வன்னியர்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டு தற்போது அதிமுக உடன் கூட்டணி அமைக்க உள்ளார். ராமசாமி படையாச்சிக்கு அரசு சிலை வைத்துள்ளது, ஆனால் ராமதாசோ அன்புமணியோ அந்த சிலைக்கு மாலை கூட அணிவிக்கவில்லை.
நாங்கள் வன்னியர் நலனுக்காக ஜெ குரு வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை தொடங்கி இருக்கிறோம். வன்னியர் நலனுக்காக செயல் படும் இந்த அமைப்பின் சார்பில் குருவின் தாயார் கல்யாணி மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். அன்புமணி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து கல்யாணி போட்டி இடுவார். மற்ற எந்த பாமக வேட்பாளருக்கு எதிராகவும் எங்கள் அமைப்பு போட்டி இடாது” என தெரிவித்துள்ளனர்.