ஜெய்ப்பூர்:

காஷ்மீர் புல்வாமா தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் பக்தர்கள் இந்தியா வர தடை விதியுங்கள்எ என்று ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா தலைவர் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஜ்மீர் தர்காவின் தலைவர் சையத் ஜைனுலாபிதீன் அலி கான், அஜ்மீர் தர்காவுக்கு பாகிஸ்தான் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், கோபத்தையும்  ஏற்படுத்தி உள்ள புல்வாமா பயங்கரவாத குண்டு வெடிப்பில்,  44 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும்,  20 வீரர்கள் படு காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் முதல் அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் தலைவர் திவான் சையத் ஜைனுலாபிதீன் அலி கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அஜ்மீர் தர்காவுக்கு பாகிஸ்தான் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் உயிரை பறிப்பது இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. அஜ்மீர் தர்காவில் உரூஸ் உள்ளிட்ட திருவிழாக்களின்போது பாகிஸ்தானிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இனிமேல் அவர்களின் வருகைக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.