புதுடெல்லி:

தேசிய அளவிலான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 9,750-ஆக நிர்ணயிக்கலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.


தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க விவி.கிரி தேசிய தொழிலாளர் நிலையத்தைச் சேர்ந்த அனுப் சத்பதி தலைமையிலான 7 நபர் நிபுணர் குழுவை, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் நியமித்தது.  இந்த குழு அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரே மாதிரியான தேசிய அளவிலான ஊதியத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.9,750 என நிர்ணயிக்கலாம். இந்த ஊதியம் ரூ.8,892 முதல் 11,622 வரை இருக்கலாம். நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்கள், அவர்களது திறமை, சார்ந்த துறை, தொழில் மற்றும் கிராம&நகர பகுதி என பிரிக்கப்பட்டு இந்த ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

நகர்ப்புற தொழிலாளர்களுக்கு கூடுதலாக வீட்டு வாடகை மாதம் ரூ. 1,430 தரலாம். அல்லது தினசரி ரூ.55 தரலாம். நகரத்தின் அளவை பொறுத்து இந்த தொகை மாறுபடும். தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை ஐந்து கட்டங்களாக நிர்ணயிக்கலாம்.

1. தினசரி ரூ.342 அல்லது மாதம் ரூ 8,892.  2. தினசரி ரூ.380 அல்லது மாதம் ரூ. 9,880.  3. தினசரி ரூ.414 அல்லது மாதந்தோறும் 10,764.  4. தினசரி ரூ.447 அல்லது மாதம் ரூ. 11,622.  5. தினசரி ரூ.386 அல்லது மாதம் ரூ.10,036 வழங்கலாம்.

முதல் கட்ட ஊதியம் அசாம், பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிஷா, உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தலாம்.

இரண்டாவது பிரிவை, ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தலாம்.

மூன்றாவது பிரிவை குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாட்டில் செயல்படுத்தலாம்.

நான்காவது பிரிவை, டெல்லி, கோவா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தலாம்.

ஐந்தாவது பிரிவை, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மேகாலயா, நாகாலந்து, சிக்கிம், மிஜோரம் மற்றும் திரிபுராவில் செயல்படுத்தலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.