திருநள்ளாறு:
சனி பகவானின் ஸ்தலமான திருநள்ளாறில் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு 12 ஆண்டுகளுக்குப்பிறகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சனிஸ்பகவானின் தனி சன்னதி அமைந்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கும்பா பிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 3-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா, 150 சிவாச்சாரியார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தி வந்தனர். தொடர்ந்து 802 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று இறுதிநாள் பூஜையாக 8-ம் கால யாக பூஜை நடை பெற்றது.
அதைத்தொடர்ந்து யாக குண்டங்களில் இருந்து புனிதநீர் கலசங்களை கோபுரத்துக்கு எடுத்து சென்று காலை சரியாக 9.18 மணிக்கு ராஜகோபுரம், தர்பாரண்யேஸ் வரர், சனீஸ்வர பகவான், அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள 3 நிலை கோபுரங்களில் உள்ள அனைத்து கலசங்களுக்கும் வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.