சென்னை:
ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து வழக்கில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதுவரை, மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அப்போலோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசா ரணை இன்று நடைபெற்றது.
அப்போது , ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அப்போலோவில் சுமார் 75 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை ஏற்படுத்தியது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுமீதான நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
அப்பல்லோ மனுவுக்கு பதில் அளிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.