சென்னை:
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அதே தொகுதியில் அவரை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 87 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதுகுறித்து விசிக சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவில், தனது தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. காட்டுமன்னார் கோயில் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், வாக்கு எண்ணிக்கையின்போது, தனது கட்சி பூத் முகவர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்ட தாகவும் குற்றம் சாட்டி, முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை தொடர்ந்து, தேர்தல் வழக்கில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியம் அளிப்பதற்காக, மனுதாரர் என்ற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பிப்ரவரி 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைக்கப்பட்டது.