வடோதரா
சர்தார் சரோவர் அணைக்கட்டில் இருந்து வெளியாகும் நர்மதை நதி நீர் கடும் மாசு அடைந்துள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
குஜராத் மக்களுக்கு முக்கிய நீராதாரம் நர்மதை நதி ஆகும். இந்த நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரில் ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன. அத்துடன் ஒரு வகையான நாற்றம் அடிக்கிறது.
இதை ஒட்டி குஜராத் மாநில குடிநீர் வடிகால் வாரியம் சர்தார் சரோவர் அணையின் பிரதான கால்வாயில் இருந்து நீரை எடுத்து பரிசோதனை செய்தது. அப்போது அதில் சல்பைடு அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் வேறு ஏதும் ரசாயனக்கலவை காணவில்லை.
அதே நேரத்தில் இந்த நீர் பாக்டீரியா சோதனையின் முலம் நேரடியாக பருக முடியாத நீர் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே வடோதரா, சோட்டா உதேப்பூர், உள்ளிட்ட பல இடங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
குஜராத் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இந்த நீரில் நிறைய மீன்கள் இறந்துள்ளதாலோ அல்லது ஏதேனும் தொழிற்சாலையின் கழிவு நீர் கலந்திருந்தாலோ சல்பைட் அதிகரிக்க வாய்புள்ளதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் அதனால் இந்த நீர் குடிக்க முடியாதபடி மாசடைந்திருக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.
ஏராளமான மீன்கள் இறந்திருப்பதுகுறித்து விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஞாயிறு அன்று பிரதான கால்வாய் அருகில் இருந்த குளத்தில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த நீர் கால்வாய்க்கு வந்த ஒரு மணி நேரத்தில் ஏராளமான மீன்கள் இறந்துள்ளன. அந்த நீர் கால்வாயில் பார்க்கும் போது கருப்பாக தெரிந்தாலும் குவளையில் எடுத்து பார்க்கும் போது தெளிவாகவே உள்ளது.
குஜராத் குடிநீர் வடிகால் வாரிய தலைவர் குப்தா, “பாக்டீரியா சோதனையில் நர்மதை நதி நீர் குடிக்க லாயக்கற்றது என கூறப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நீரை சுத்திகரிப்பதன் மூலம் குடி நீராக மாற்ற முடியும். அதன் பிறகு குடிக்க உபயோகிக்கலாம். அதனால் சிறிது நாட்களுக்கு நர்மதை நதி நீரை குடிநீராக விநியோகம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
குஜராத் மக்கள் தங்கள் வாழ்வாதாரமான நர்மதை நதி நீர் மாசடைந்துள்ளதால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.