சென்னை:

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு, வழக்கு குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7,324 காவல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காவல் நிலையங்களில் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) போடப்படும் நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தாமல், ஏராளமான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

வழக்கை விசாரித்த  நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழகம் முழுவதும் கடந்த 2009-ஆம் ஆண்டு 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடந்து, தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்து 901 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்ததார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது தமிழக காவல்துறை டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யாத 7 , 324 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும்,  இதுகுறித்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும்சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான உரிய விதிகளை வகுப்பது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐஜிக்களிடம் இருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது.

குறித்த காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணைகளைக் கண்காணிக்கவும் உதவி ஆணையர் அல்லது காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு குறையாத அதிகாரிகளை நியமிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது,.

‘தமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 603 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளன.

இந்த சிக்கலைத் தீர்க்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் இறுதி தேதியை குறிப்பிடுவதற்கு வசதியாக கீழமை விசாரணை நீதிமன்றங்களில் தனிப்பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதி  ஒத்திவைத்தார்.