சென்னை:
தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.
வன்னிய சமுதாயத்தை சேர்ந்த பலர், சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக வழங்கிய நன்கொடைகள் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கவும், சொத்துகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பினை வழங்கக் கோரி வன்னிய சமுதாயத்தை சேர்ந்த அமைப்புகள் அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தன.
வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய பொது டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளை சட்டம் 2018 (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) என்ற மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு (2018) ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது.
பின்னர் இந்த மசோதா, மத்திய சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்ற நிலையில், இதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாத இறுதியில் ஒப்புதல் வழங்கினார். அதைத்தொடர்ந்து, தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை விவரம் வருமாறு.
தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய பொது டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்களாக, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாச்சலம் மற்றும் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அறக்கட்டளையின் சிறப்பு உறுப்பினராக ஓய்வுபெற்ற மின்வாரிய உயர் அதிகாரி ஆர்.தியாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அத்துடன் அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளராக, விழுப்புரம்மாவட்ட ரெவின்யூ அதிகாரி ஆர்.பிருந்தா தேவியும் நியமிக்கப்பட்டுஉள்ளார்.