சென்னை:

அ.தி.மு.க. சார்பில்  நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மனு விற்பனையை தொடங்கி வைத்தனர்.

நாடாளுமன்ற மக்களவைப் பொது தேர்தல் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், வரும் 4ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கடந்த ஜனவரி 30ந்தேதி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, அதிமுக உறுப்பினர்கள் 25ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை இன்றுமுதல் பெறலாம் என்றும்,  பிப்ரவரி 10ந்தேதி  வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அன்றைய தினமே ( பிப்ரவரி 10) மாலை  5மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட கட்சித் தலைமை யகத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு விண்ணப்பங்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டுக்கூட்டணிப் பேச்சு, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு அனைத்தும் முடிந்தபின் எந்தெந்தத் தொகுதிகளின் வேட்பாளர் யார் என்கிற பட்டியல் வெளியிடப்படும் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது..