புதுடெல்லி:

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக எழுந்துள்ள சந்தேகம் குறித்து , தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து எதிர்கட்சிகள் தலைவர்கள் குழு விவாதிக்கும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.


புதுடெல்லியில் நடந்த எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் விவாதிக்க, வரும் திங்கள்கிழமை எதிர்கட்சிகள் தலைவர்கள் இணைந்து செல்கின்றோம்.

விவசாயிகளுக்கு வருடந்தோறும் ரூ.6 ஆயிரம் தரப்படும் என்று பட்ஜெட் உரையில் இடைக்கால நிதியமைச்சர் ப்யூஸ் கோயல் அறிவித்துள்ளார்.

15 பேரது ரூ.3.5 கோடி கடனை தள்ளுபடி செய்யும் நீங்கள், விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டும் தருவதாகக் கூறுவது, அவர்களை அவமதிக்கும் செயலாகும்.

வேலையில்லா திண்டாட்டம் மோசமாக உள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி அரசின் ரஃபேல் பேரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள் பிரச்சினைகள் ஆகியவை பிரதானமாக முன்வைக்கப்படும் என்றார்.

எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வரும் தெலுங்குதேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தேரக் ஓப்ரீன் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.