புதுடெல்லி:

முக்கியத்துவம் வாய்ந்த சி.பி.ஐ. க்கு, நிரந்தரமாக இயக்குனரை நியமிக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிபிஐ தற்காலிக இயக்குனர் நாகேஸ்வரராவ்.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டனர்.

இதனையடுத்து, அலோக் வர்மா மீது விசாரணை நடத்திய பிரதமர் தலைமையிலான உயர் மட்டக் குழு, ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கியது.

இதில் சிபிஐ இயக்குனரை நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வாக்களித்தார்.

இதனையடுத்து, சிபிஐ-க்கு தற்காலிக இயக்குனராக நாகேஸ்வரராவை மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஷ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம், சி.பி.ஐ.க்கு நிரந்தர இயக்குனரை மத்திய அரசு ஏன் இன்னும் நியமிக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மிகவும் தனித்துவமும், முக்கியத்துவமும் வாய்ந்த பதவி என்பதால் இதில் இடைக்கால இயக்குனர் நீண்ட காலத்துக்கு தொடர்வது சரியல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் வேணுகோபால், புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் உயர் மட்டக் குழுவின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.