டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகளிடம்  ஆலோசனைகள், முன்னேற்பாடுகள், கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் போன்றவை  ஜரூராக நடைபெற்று வருகின்றன.

டில்லியில்  உள்ள 7 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளதாக டில்லி மாநில காங்கிஸ் தலைவரான முன்னாள் முதல் ஷீலா தீட்சித் கூறி உள்ளார்.

பிரியங்கா காந்திக்கு அரசியல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஷீலா தீட்சித், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ள,  குறைந்தபட்ச வருமானத்தை எல்லா ஏழைகளுக்கும் உறுதி செய்யும் திட்டம்  காரணமாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறுவார்கள் என்றும்,  ராகுல்காந்தியின் இந்த புரட்சிகர திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தவர்,  இது ஒரு முன்னோடியான திட்டம், இதுபோன்ற திட்டம் வேறு எந்த நாட்டிலும் கிடையாது என்று தெரிவித்தார்.

இது, நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு புரட்சிகர நடவடிக்கை என்றும், பசி மற்றும் வறுமைக்கு இந்த புரட்சிகர திட்டம் இறுதி அடியாக இருக்கும் நேரத்தில் காந்தியின் அறிவிப்பு ஏழைகளின் மேம்பாட்டிற்கு நீண்டகால விளைவைக் கொடுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த புரட்சிகர திட்டம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப் படும் என்றும்  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், இந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார்.