திருவனந்தபுரம்

கேரளாவில் வெள்ள நிவாரண நிதிக்காக கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதால் திரைப்பட டிக்கட்டுகள், மது, மற்றும் தங்கத்தின் விலை உயர உள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வீடிழந்தனர். பல பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தன. வெள்ளம் வடிந்து மாதங்கள் ஆன போதிலும் நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதற்காக அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது.

கேரள அரசு நேற்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அம்மாநில நிதி அமைச்சர் டி எம் தாமஸ் ஐசக் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் அவர் வெள்ளத்தினால் கேரள மாநில பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அரசின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குறிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிதி பற்றாக்குறையை ஒட்டி கேரள மாநிலம் வெள்ள நிவாரணத்துக்காக கூடுதல் வரி விதிக்க உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஜிஎஸ்டியான 12%, 18% மற்றும் 28% கீழ் வரும் பொருட்களுக்கு மேலும் 1% கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. அதைப் போல் தங்கம், சில்வர் மற்றும் பிளாட்டினத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு 0.25% கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது.

வரிக்கு மேல் வரி விதிப்பதால் தேவையற்ற குழப்பங்கள் நேரிடலாம் என்பதால் இந்த வரி இறுதி விற்பனையின் போது மட்டும் விதிக்கப்படும். இந்த கூடுதல் வரி விதிப்பு கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி விற்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அத்துடன் பீர் உள்ளிட்ட மது வகைகளுக்கு 2% கூடுதல் வரி விதிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புக்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளில் 10% வரை கூடுதல் வரி விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் இந்த கூடுதல் வரி விதிப்பின் மூலம் மாநிலத்துக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.