சென்னை:

யில்வே துறை சார்பாக நடைபெறும் தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழில் தேர்வு எழுதும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவது எப்படி என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில், முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், ரயில்வே தேர்வு நடைபெற்ற போது, சான்றளிப்பவர் கையெழுத்து இல்லை எனக் கூறி, தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்ட்டு உள்ளது. ஆனால், சான்றளிப்பவரின் கையெழுத்து இல்லாத நிலையிலும் வட மாநிலத்தவர் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.

அதுபோல, ஹால் டிக்கெட்டுகளில், புகைப்படம் ஒட்டியும், ஒட்டாமலும் 2 விதமான தேர்வு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தது. இது மோசடி என்றும், வடமாநிலத்தவர்களுகு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்க  பலகோடி ரூபாய் பணம் பெற்று இந்த முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய அரசின்  தபால் துறையிலும் இதேபோன்ற ஊழல் முறைகேடு புகார் எழுந்தது என்பதை சுட்டிக் காட்டினார். மேலும், தமிழில் நடைபெறும் ரயில்வே தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற முறைகேட்டை  சாதாரணமான எடுத்துக் கொள்ள முடியாது என்று கண்டித்த நீதிபதி,  இதேமுறையில் வடமாநிலங்களில் தமிழர்கள் தேர்வாகி யிருந்தால் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் என்றவர், இதுகுறித்து பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து  சி.பி.ஐ. தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கின்  விசாரணையை அவர் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.