டில்லி
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பிரதமர் மோடியின் மீது உள்ள விஸ்வாசத்தை காட்ட தம்மை விமர்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோவா மாநில முதல்வர் நீண்ட நாட்களாக கணையப் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கோவா, டில்லி, மும்பை, நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் ஓய்வில் உள்ளார். கோவா மாநில நிதிநிலை அறிக்கையை அவர் மூக்கில் டியூப் பொருத்தப்பட்ட நிலையில் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவா முதல்வரை கோவா சட்டப்பேரவை வளாகத்தில் அமைந்துள்ள அவர் அலுவலகத்தில் நேற்று மதியம் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது அவருடன் கோவா மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் உடன் இருந்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் ராகுல் காந்தி இது குறித்து பேசுகையில், “கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தேன். அப்போது அவர் ரபேல் விமான புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்” என காங்கிரஸ் கட்சியினரிடம் தெரிவித்தார்.
இதற்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் என்னை 5 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தீர்கள். அப்போது நாம் ரபேல் குறித்து எதுவுமே பேசவில்லை. இந்த சந்திப்பை நீங்கள் அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என எழுதி உள்ளார்.
அதற்கு ராகுல் காந்தி எழுதியுள்ள பதில் கடிதத்தில், “நான் உங்களை சந்தித்து குறித்து எனக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளீர்கள். துரதிருஷ்டவசமாக அந்த கடிதத்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. நான் உங்கள் நிலையை நன்கு புரிந்துக் கொண்டுள்ளேன். மோடி மீதுள்ள உங்கள் விஸ்வாசத்தை நிரூபிக்க என்னை நீங்கள் விமர்சித்துள்ளீர்கள்.
நான் உங்களுக்கும் எனக்கும் இடையே நடந்த சந்திப்பின் விவரங்களை வெளியிடவில்லை. உங்களை சந்தித்த பிறகு நான் பேசிய இரு கூட்டங்களிலும் ஏற்கனவே வலை தளங்களில் வந்துள்ள குற்றச்சாட்டுக்களை மட்டுமே தெரிவித்தேன். அத்துடன் நான் அவை வலைத் தளங்களில் வந்துள்ளன என சுட்டிக் காட்டி இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.