அமராவதி
மதுரையில் மோடிக்கு எதிராக நடந்த போராட்டம் மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலிப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரைக்கு வந்தார். அவருக்கு இணைய தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோபேக் மோடி என்னும் ஹேஷ்டாக் இந்திய அளவில் அதிக இடம் பிடித்தது. மதிமுக சார்பில் வைகோ தலைமையில் மதுரையில் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது. மோடிக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து நாடெங்கும் பேசப்பட்டது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அமராவதி நகரில் ஒரு தொலைபேசி கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார். அப்போது அவர், “கடந்த ஞாயிறு அன்று மதுரையில் பிரதமர் மோடிக்கு எதிராக பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய போது மக்களுக்கு மோடி உதவாததால் ஏற்பட்ட கோபத்தின் விளைவே இந்த போராட்டங்கள்.
தமிழகத்தை ஏமாற்றியது போல் மோடி ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காமல் ஆந்திர மக்களுக்கும் ஏமாறத்தை அளித்துள்ளார். இதைப் போல் பல மாநிலத்தவருக்கும் அவர் ஏமாற்றத்தை அளித்துள்ளார். அதனால் நாடெங்கும் உள்ள மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். அந்த கோபத்தின் ஒரு பிரதிபலிப்பு மதுரையில் அவருக்கு எதிராக நடந்த போராட்டமாகும். நாடெங்கும் அதைப் போல் விரைவில் போராட்டங்கள் நடைபெறும்.“ என தெரிவித்துள்ளார்.