சென்னை:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டம் 5வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தலைமை செயலகம் ஊழியர் சங்கம் உள்பட மேலும் 6 சங்கங்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு மற்றும் உயர்நீதி மன்றம் எச்சரிக்கையையும் மீறி, போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டம் காரணமாக அரசு பணிகள் ஸ்தம்பித்து உள்ளன. மேலும் ஏராள மான தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதன்படி நாளை (30ந்தேதி) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும், தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமை செயலக ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் 30ம் தேதி (நாளை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.
பின்னர், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் (பீட்டர் அந்தோணிசாமி), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (சண்முகராஜன்), தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி மற்றும் டி பிரிவு (சவுந்தரராஜன்), தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம் (எஸ்.மதுரம்), தமிழ்நாடு அரசு தலைமை செயலக ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் (ராஜாராம்) மற்றும் தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் (பாலமுருகன்) ஆகியோர் கூடி பேசினர்.
அதைத்தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், தங்களது 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், அரசாணை எண் 56ஐ ரத்து செய்திட வேண்டும். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் என கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள 17பி உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 30ம் தேதி (நாளை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வோம். அப்படியும் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் 31ம் தேதி (வியாழன்) அன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் சேர்ந்து அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிப்போம் என்று தெரிவித்தனர்.
எங்களின் போராட்டத்தால், தலைமை செயலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுகளும் இயங்காது. வேலைநிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அமைச்சர் சொன்னார் என்பதற்காக, பழைய ஓய்வூதியம் கிடைக்காது என்று சொல்லிவிட முடியாது. அமைச்சரின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 27ம் தேதி வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகுதான் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். அந்த அறிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லாருக்கும் ஓய்வூதியம் கொடுக்கும்போது எங்களுக்கும் வழங்க வேண்டும். அரசு மீண்டும் அழைத்து பேசும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு ஏற்கவில்லை என்றால் 31ம் தேதி கூடி மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.