சென்னை:

மிழகத்தில் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பணிக்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  அடக்கு முறைகளை ஏவி எங்களை நசுக்கிவிட முடியாது ஜாக்டோ-ஜியோ  நிர்வாகிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து  ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜாக்டோ-ஜியோ போராட்டம் நாளுக்கு, நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் அரசு தரப்பில் அடக்குமுறைகள் ஏவப்படுவதும், புளுகுமூட்டைகள் அவிழ்த்துவிடப்படுவதும் அதிக ரித்து வருகின்றன. மக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசும், அமைச்சர்களும் அறிக்கைகள் விட்ட வண்ணம் உள்ளனர். அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிக ஆசிரியர்களை ரூ.7,500 சம்பளத்தில் 28-ந்தேதி (இன்று) முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பயமுறுத்த அறிக்கை விட்டார்.

ரூ.7,500-க்கு ஆசிரியர்கள் கிடைக்காத நிலையில் அதை இப்போது ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்தாலும், அவர்களால் மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் தக்க முறையில் பாடங்களை போதிக்க முடியாது என்பதை மாணவர்களும், பெற்றோரும் அறிவார்கள். ஆனால் அரசோ ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை நேரடியாக அழைத்துப் பேசுவதை கவுரவ பிரச்சினையாக கருதுகிறது.

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று ஐகோர்ட்டில் வழக்கு போட்டு, போராட்டத்துக்கு தடை வாங்குகிறதே தவிர, 3 வருடங்களாக போராடுகின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களை நேரடியாக அழைத்துப் பேசி பிரச்சினைகளை தீர்க்க நினைக்கவில்லை. அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரும் இந்த அரசு தான், நாங்கள் போராடாமல் எங்கள் கோரிக்கைகளை பரிசீலியுங்கள் என்று பல முறை கெஞ்சிய போது அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் 110 சதவீத உயர்வு அளித்து அரசாணை வெளியிட்டது. அப்போது மட்டும் அரசின் நிதி நிலைமை செழிப்பாக இருந்ததா?

ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் பரிசீலித்து, அவர்களின் கோரிக்கைகளை மொத்தமாக இல்லாவிட்டாலும் கூடுமான அளவு நிறைவேற்றவேண்டும் என்று விரும்புகிறோம். அப்போதுதான் அரசு நிர்வாகமும், மக்கள் திட்டப்பணிகளும் தொய்வின்றி நடக்கும், சமூகத்தில் நலமும், வளமும் செழிக்கும். தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாலோ, போராட்டக்காரர்களை கைது செய்து சிறையில் அடைப்பதாலோ, அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுப்பதாலோ, பொய்யான அறிக்கை விடுவதாலோ கொழுந்துவிட்டு எரியும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று இந்த அரசு நினைத்தால் அது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.

அறிக்கைகள், புள்ளி விவரங்கள், மாற்று ஏற்பாடுகள், அடக்கு முறைகள், எச்சரிக்கைகளாலும் போராட்டத்தை நசுக்கிவிடமுடியாது. இனியாவது இதனை உணர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை உடனடியாக களைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.