மதுரை:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாக மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்த நிலையிலும், பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தன.
பின்னர் கார் மூலம் விழா நடைபெற்ற மதுரை மண்டேலா நகருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க ஒப்புதல் அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரை, தஞ்சை, நெல்லையில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 12 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களையும் அவர் திறந்துவைத்தார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் தமிழில் பேச்சைத் தொடங்கினார். மீனாட்சி அம்மன் கோவில் உள்ள மதுரைக்கு வந்ததும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்குள் டிபி (காசநோய்) இல்லாத மாநிலமாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் பாராட்டினார்.
மதுரை தோப்பூரில் ரூ 1264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும்- 48 மாதங்களில் இப்பணி நிறைவு பெறும் 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 60 செவிலியர் படிப்பிற்கான இடங்களும் அனுமதிக்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி மதுரை வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2 மணி நேரத்திற்கு மதுரை விமான நிலையத்தில் தற்காலிகமாக விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்தும், மேலும், மதுரை நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று மாலை நடைபெற உள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.