புதுடெல்லி:
ரயில் பயணிகளுக்கு 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கட்டணச் சலுகைகளை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது.
இது குறித்து விவரம் வருமாறு:
மாணவ, மாணவியர்:
வீடுகளுக்கு வரும் மற்றும் சுற்றுலா செல்லும் மாணவ, மாணவியரில் பொதுப்பிரிவினருக்கு இரண்டாம் வகுப்பு மற்று படுக்கை வசதி இருக்கையில் 50 சதவீத கட்டண சலுகை உண்டு. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு முறையே 75 சதவீதம் கட்டணச் சலுகை உண்டு.
கிராமப்புற மாணாக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்ல இரண்டாம் வகுப்பில் 75 சதவீதம் கட்டணச் சலுகை.
தேசிய அளவிலான மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதும் அரசுப் பள் மாணவிகளுக்கு இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 77% கட்டணச் சலுகை.
யூபிஎஸ்சி மற்றும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் நடத்தும் மெயின் எழுத்துத் தேர்தவில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு இரண்டாம் வகுப்பு பயணம் செய்ய 50 சதவீதம் சலுகை.
இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அரசு நடத்தும் கருத்தரங்கம் மற்றும் வரலாறுச் சிறப்புமிக்க இடங்களுக்கு செல்ல இரண்டாம் வகுப்பில் 50% கட்டணச் சலுகை.
ஆராய்ச்சி தொடர்பான பயணம் மேற்கொள்ளும் 35 வயது மிகாத ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கு இரண்டாம் வகுப்பில் 50% கட்டணச் சலுகை உண்டு.
வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்கும் மாணவர் மற்றும் மாணவர் அல்லாதவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 25% கட்டணச் சலுகை.
கப்பல் துறையில் பொறியாளர் பயிற்சி பெறுவோர், வீட்டுக்கும் பயிற்சி நடைபெறும் இடம் வரையில் பயணம் செய்ய இரண்டாம் வகுப்பில் 50% சலுகை.
மூத்த குடிமக்கள் :
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அனைத்து வகுப்புகளில் பயணிக்க 40 சதவீதம் கட்டணச் சலுகை.
58 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் 50% கட்டணச் சலுகை. ராஜ்தானி, சதாப்தி உட்பட எந்த ரயிலாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
நோயாளிகள்:
புற்றுநோயாளிகள் சிகிச்சை மற்றும் தொடர் பரிசோதனைகளுக்காக தனியாகவோ அல்லது துணைக்கு ஒருவருடனோ முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் பயணிக்க 75% சலுகை.
படுக்கை வசதி மற்றும் 3ஏசி வகுப்பில் 100% கட்டண சலுகை, முதல் வகுப்பு ஏசி மற்றம் 2ஏசி வகுப்பில் பயணம் செய்ய 50% கட்டணச் சலுகை. துணைக்கு வரும் நபர்களுக்கு இதே சலுகை கட்டணம்தான்( படுக்கை வசதி மற்றும் 3 ஏசியில் 75% சலுகை.
மூளை நரம்பு முடிச்சு நோய் சிகிச்சைக்கு/தொடர் பரிசோதனைக்கு தனியாகவோ, துணைக்கு ஒருவருடனோ பயணிக்க இரண்டாம் வகுப்பு,படுக்கை வசதி, முதல் வகுப்பு, 3 ஏசி, ஏசி சேர் கார் பயணத்துக்கு 75% கட்டணச் சலுகை.
இருதய அறுவை சிகிச்சைக்காக பயணிக்கும் இருதய நோயாளிகளுக்கும், துணைக்கு வருவோருக்கும் 1 ஏசி மற்றும் 2 ஏசியில் பயணிக்க 50% கட்டணச் சலுகை. சீறுநீரக மாற்ற அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் துணைக்கு வருவோருக்கும் இதே கட்டணச் சலுகையே.
காசநோய் மற்றும் லூபஸ் வல்கரிஸ் என்ற தோல் காசநோயாளிகளுக்கும், துணைக்கு வருவோருக்கும் இரண்டாம் வகுப்பு முதல் வகுப்பில் 75% கட்டணச் சலுகை.
பரவாத தொழுநோயாளிகள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வரும் போது இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்ய 75% கட்டணச் சலுகை. துணைக்கு வரும் ஒருவருக்கும் அதே கட்டணச் சலுகை.
எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வரும்போது, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 50% கட்டணச் சலுகை. மாதாந்திர சீசன் மற்றும் 3 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் சீசன் டிக்கெட்களில் 50% சலுகை.
ஓஸ்டோமி நோயாளிகளுக்கு இரண்டாம் வகுப்பில் 50% சலுகை. துணைக்கு வருவோருக்கும் அதே சலுகை.
குறைபிறப்பு ரத்தசோகை சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கும் படுக்கை வசதி, ஏசி 2 டயர், ஏசி சேர் வசதியில் பயணம் செய்ய அடிப்படைக் கட்டணத்திலிருந்து 50% சலுகை.
அணுச்சிதைவு நோயாளிகள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வர, படுக்கை வசதி, ஏசி 2 டயர், 3 ஏசி, ஏசி காரில் 50% கட்டணச் சலுகை.
மாற்றத் திறனாளிகள்:
கால், கைகளை இழந்து அடுத்தவர் துணையின்ற செயல்பட முடியாதர்வகளுக்கு எதற்காக பயணித்தாலும், அவருக்கும் துணைக்கு வருவோருக்கும் இரண்டாம் வகுப்பு,படுக்கை வசதி, முதல் வகுப்பு, 3 ஏசி, ஏசி சேர் காரில் பயணிக்க 75% கட்டணச் சலுகையும், 1ஏசி மற்றும் 2 ஏசியில் 50% சலுகையும் உண்டு. அவருடன் துணைக்கு வருபவருக்கும் அதே கட்டணச் சலுகை உண்டு.
பார்வையற்றவருக்கு எந்த தேவைக்கு ஆனாலும் 3ஏசி, ராஜ்தானி, சதாப்தி உட்பட எந்த ரயிலிலும் ஏசி காரில் பயணிக்க 25% கட்டணச் சலுகை. துணைக்கு வருபவருக்கும் இந்த சலுகை உண்டு.
மனநிலை பாதிக்கப்பட்டவர் துணையோடு எந்த காரணத்துக்கு பயணித்தாலும் மாதாந்திர சீசன் மற்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சீசன் டிக்கெட்டில் 50% சலுகை. துணையாக வருபவருக்கும் இதே சலுகை.
வாய் பேசமுடியாதவர் தனியாகவோ, துணைக்கு ஒருவருடனோ பயணிக்க இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி, முதல் வகுப்பில் பயணிக்க 50% கட்டணச் சலுகை. மாதாந்திர மற்றும் 3 மாதங்களுக்கு ஒரு முறை சீசன் டிக்கெட்டுகளுக்கு 50% கட்டணச் சலுகை. துணைக்கு வருபவருக்கும் இதே சலுகை.
விருது பெற்றோர்:
ஜனாதிபதி விருது பெற்ற போலீஸார், சிறப்பாக பணியாற்றியதற்காக 60 வயதுக்குப் பின் வழங்கப்படும் விருது பெற்ற ஆண்களுக்கு 50%, பெண்களுக்கு 60% கட்டணச் சலுகை அனைத்து ரயில்களிலும் உண்டு.
தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான பிரதமரின் ஷ்ராம் விருது பெற்ற தொழிலாளர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதியுடன் பயணிக்க 75% கட்டணச் சலுகை.
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதியுடன் பயணிக்க 50% கட்டணச் சலுகை.
வீரதீரச் செயல்களுக்காக விருது பெறும் குழந்தைகளுக்கு பெற்றோரில் ஓருவருடன் பயணிக்க இரண்டாம் வகுப்பு மற்று படுக்கை வசதி கொண்ட பயணத்துக்கு 50% கட்டணச் சலுகை.
விதவைகள்:
போரில் வீரமரணம் அடைந்தோரின் மனைவிகளுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பயணத்தக்கு 75% கட்டணச் சலுகை.
தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உயிர்நீத்த போலீஸ் மற்றும் பாரா மிலிட்டரியினரின் மனைவிகளுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பயணத்துக்கு 75% கட்டணச் சலுகை.
இலங்கையில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படையினரின் மனைவிகளுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்துக்கு 75% கட்டணச் சலுகை.
இளைஞர்கள்:
தேசிய இளைஞர் திட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதியுடன் பயணிக்க 50% கட்டணச் சலுகையும், மாணவ் உத்தான் சேவா சமீதி முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதியுடன் பயணிக்க 40% கட்டணச் சலுகை.
மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சி, பல்கலைக்கழகங்களில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதியில் பயணிக்க 50% சலுகை.
மத்திய, மாநில அரசு வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்லும் இளைஞர்களுக்கு இரண்டாம் வகுப்பில் இலவசமாகவும், படுக்கை வசதியுடன் 50% கட்டண சலுகையுடனும் பயணிக்கலாம்.
பாரத் சாரணியர் பணியில் ஈடுபடும்போது இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்துக்கு 50% சலுகை.
கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்:
நடிப்புத் தொழில் செய்யும் கலைஞர்கள் இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்துக்கு 75% சலுகை. முதல் வகுப்பு மற்றும் ஏசி கார், 3 ஏசி, 2 ஏசி வகுப்புகளில் 50% சலுகை. ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் மற்றும் 3ஏசி, 2 ஏசி ரயில்களில் 50% கட்டணச் சலுகை.
படத்தயாரிப்பு தொடர்பாக பயணிக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு படுக்கை வசதி பயணத்துக்கு 75%, முதல் வகுப்பு, ஏசி சேர் கார், 3 ஏசி, 2 ஏசி வகுப்பகளில் 50% சலுகை(ராஜ்தானி/சதாப்தி உட்பட).
அகில இந்திய, மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வீரர்களுக்கு, இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்தில் 75% கட்டணச் சலுகை. முதல் வகுப்பில் 50% கட்டணச் சலுகை.
தேசிய போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு இரண்டாம் வகுப்பு பயணம் மற்றும் படுக்கை வசதி பயணத்துக்கு75% சலுகையும், முதல் வகுப்பில் 50% சலுகையும் உண்டு.
ஐஎம்எப் மூலம் மலையேற்றத்தில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்துக்கு 75% சலுகையும், முதல் வகுப்பில் 50% சலுகையும் உண்டு.
மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் பணி நிமித்தமாக செல்லும்போது, ராஜ்தானி, சதாப்தி ஜன் சதாப்தி உட்பட அனைத்து ரயில்களிலும் 50% கட்டணச் சலுகை.
பத்திரிகையாளர்களின் மனைவி, துணைக்கு வருவோர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வருடம் ஒருமுறை 50% கட்டணச் சலுகையுடன் பயணிக்கலாம்.
மருத்துவத் துறை:
ஆங்கில மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்க அனைத்து ரயில்களிலும் 10 % கட்டணச் சலுகை உண்டு. செவிலியர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்தில் 25% கட்டணச் சலுகை உண்டு.
மாநாடு,முகாம், சுற்றுலா:
அகில இந்திய அளவில் சமூக, கலாச்சார,கல்வி தொடர்பான வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்தில் 25% சலுகை. பெங்களூர் பாரத் சேவா தள முகாம், கூட்டம், பேரணி, மலையேற்றத்தில் பங்கேற்போருக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்துக்கு 25% கட்டணச் சலுகை.
சமூக சேவை செய்யும் சர்வதேச தன்னார்வலர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்தில் 25% கட்டணச் சலுகையும், கொல்கத்தா செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையின் உறுப்பினர்கள், முகாம் மற்றும் போட்டிகளில் பங்கேற்க இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணத்துக்கு 25% கட்டணச் சலுகை உண்டு.
இதுதவிர, மாத வருமானம் 1,500க்கு கீழ் உள்ளவர்கள் 25 கி.மீ தொலைவு வரை பயணிக்க மாதாந்திர சீசன் ரூ.25.
இந்த சலுகைக் கட்டணம் எல்லாம் அடிப்படை கட்டணத்திலிருந்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. அதிவேக ரயில்களுக்கான கட்டணம் மற்றும் ரிசர்வேஷன் கட்டணம் இந்த சலுகையில் அடங்காது.