பானஜி:

திறந்தவெளியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ ரூ 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது.


கோவாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொறுப்பற்ற முறையில் திறந்தவெளியில் மது அருந்தினால் அபராதம் விதிக்கப்படும் என கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

மேலும் மண்டோவி ஆற்றில் பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து மலர்களை கொட்டுபவர்களையும் முதல்வர் மனோகர் பாரிக்கர் கண்டித்திருந்தார்.

இந்நிலையில், அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜனவரி 29-ம் தேதி சுற்றுலா வணிகச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

அதன்படி, திறந்தவெளியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தனிப்பட்ட நபருக்கு ரூ.2 ஆயிரமும், குழுவாக சேர்ந்த செய்வோருக்கு ரூ,10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றார்.