ஆக்ரா
பிரியங்கா காந்தி அரசியல் வரவால் தாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஆக்ராவை சேர்ந்த காலணி (செருப்பு) தொழிலதிபர்கள் கூறி உள்ளனர்.
ஆக்ராவை சேர்ந்த ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காலணி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள ஏராளமான காலணி செய்யும் தொழிற்சாலைகள் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்களும் தொழிலதிபர்களும் பிரதமர் மோடி மீது மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் மோடியை எதிர்த்து பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்த செய்தி வெளிவந்ததும் அவர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதை இந்த கூட்டணி தடுத்தாலும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்த கூட்டணி வலுவானதாக இருக்காது என பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டணிக்கு அதிர்ச்சி ஊட்டும் வகையில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பொதுச் செயலராகவும் நியமித்தது. இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது எளிதாகி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ள்னர்.
இது குறித்து ஆக்ரா காலணி தொழிலதிபர்களில் ஒருவரான முகமதி செரிஃப் கலே, “தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக போட்டியிடக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பதில் ஐயமில்லை. பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்த உடன் பெரும்பாலான காலணி தொழிலாளர்களும் தொழிலதிபர்களும் அந்த கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்தனர்.
அதே நேரத்தில் அந்த கூட்டணியால் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதால் சற்றே தயங்கினார்கள். தற்போது பிரியங்காவின் அரசியல் வரவு காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அளிக்கும் என நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளது. பிரியங்காவின் அரசியல் வரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மோடியை நிச்சயம் தோற்கடிக்கும்” என தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் அமிர் குரேஷி, “முதியோரும் அறிவு ஜீவிகளும் காங்கிரசில் ராகுல் காந்தியை விட பிரியங்கா மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் அவர்கள் பிரியங்கா கட்சி தலைமையை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். அதன் மூலம் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்.
ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அயோத்தியில் ஆலயம் உள்ளதா அலலது மசூதி உள்ளதா என்பது ஒரு பிரச்னை இல்லை. அவனுடைய முதல் தேர்வு தனக்கும் தன் குடும்பத்துக்கும் உணவு உள்ளதா என்பது மட்டுமே. மோடியின் ஆட்சியில் தினசரி தேவைக்கான பொருட்களும் ஆடம்பர பொருட்கள் அளவுக்கு விலை உயர்ந்துள்ளதால் ஏழைகள் பெரும் துயர் அடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.