டில்லி
உச்சநீதிமன்றத்தில் பதியப்படும் புதிய வழக்குகள் மீதான விசாரணை ஐந்து நாட்களுக்குள் தொடங்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படும் வழக்குகளை உடனடியாக விசாரிப்பது குறித்து ஒரு விதிமுறை பல நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு வழக்கறிஞரும் உச்சநீதி மன்ற பதிவாளரை சந்தித்து தங்கள் வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்மொழி வேண்டுகோள் விடுப்பார்கள். அத்துடன் உடனடியாக விசாரணை செய்ய வேண்டியதற்கான காரணங்களையும் அவர்கள் விளக்குவார்கல்.
கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார். அவர் இந்த முறையை மாற்றி அமைத்தார். ஒரு தனி மனிதரின் வாழ்வா சாவா என்னும் வகையில் பிரச்னைகள் உள்ள வழக்குகள் மட்டுமே உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
நேற்று ரஞ்சன் கோகாய் செய்தியாளர்களிடம், “புதிய வழக்குகளை வரிசைப்படுத்த நான் ஒரு புதிய முறையை கொண்டு வந்துள்ளேன். அதன் மூலம் வழக்கு பதியப்பட்டு நான்கு அல்லது அதிகபட்சமாக 5 நாட்களுக்கு வழக்கு விசாரணை தொடங்க உள்ளது. இதன் மூலம் அவசரம் என கோரிக்கை எழுப்புவது தவிர்க்கப்படும். மற்றும் வாய்மொழி கோரிக்கைகள் அடியோடு நிறுத்தப்பட்டு நீதிமன்ற நேரம் மிச்சமாகும்: என தெரிவித்துள்ளார்.