டில்லி
பாஜக காங்கிரசை வாரிசு அரசியல் என குறை சொல்லி வருகையில் பாஜகவும் வாரிசு அரசியல் செய்து வருவது வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடந்த ஒரு பேரணியில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வாரிசு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மக்களவையில் ராகுல் காந்தியை ஒரு பிரபல குடும்பத்தின் அரசியல் வாரிசு என நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். அது மட்டுமின்றி தற்போது பிரியங்கா காந்தி அரசியலில் நுழைந்தது குறித்தும் ஏராளமான பாஜக ஆதரவாளர்கள் வாரிசு அரசியல் என சமூக வலை தளங்களில் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதை ஒட்டி ஒரு சிறு ஆய்வு செய்ததில் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வாரிசு அரசியல் செய்து வருவது தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடிக்கு குழந்தைகள் இல்லாததால் அவருடைய வாரிசுகள் அரசியலில் நுழையவில்லை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் பல மாநிலங்களில் பாஜக தலைவர்கள் முந்தைய தலைமுறையின் அரசியல் வாரிசுகளாகவே உள்ளனர்.
மகாராஷ்டிரா :
1. மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சராகவும் தற்போது இடைக்கால நிதி அமைசராகவும் பதவி வகிக்கும் பியூஷ் கோயல் முன்னாள் அமைச்சரி வேத் பிரகாஷ் மகன் ஆவார்
2. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அம்மாநில மேலவை உறுப்பினராக இருந்த கங்காதர்பந்த் ஃபட்நாவிஸ் மகன் ஆவார் அது மட்டுமின்றி அவருடைய அத்தைஷோபா ஃபட்நாவிஸ் மகாராஷ்டிரா அமைச்சராக இருந்துள்ளார்.
3. பிரமோத் மகாஜன் மகளான பூனம் மகாஜன் மும்பை மத்திய வடக்கு தொகுதியின் மகக்ளவை உறுப்பினர் ஆவார். அது மட்டுமின்றி பிரமோத் மகாஜன் நெருங்கிய உறவினர்கள் பலரும் அரசியலில் உள்ளனர்.
உத்திரப் பிரதேசம்
1. மேனகா காந்தி நேரு குடும்பத்தின் மருமகள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் பாஜக அமைச்சரவையில் உள்ளதோடு அவர் மகன் வருண் காந்தி மக்களவை உறுப்பினராக உள்ளார்.
2. உத்திர பிரதேச முன்னாள் முதல்வ்ர் கல்யாண் சிங் மகன் ராஜ்வீர் எடா தொகுதியில் மகக்ளவை உறுப்பினர் ஆவார்.
3. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் பாஜக உத்திரப் பிரதேச பிரிவில் பொதுச் செயலராக உள்ளர்.
இதைப் போல் உ.பி மாநிலத்தில் மட்டும் எட்டு வாரிசுகள் அரசியலில் உள்ளனர்.
ராஜஸ்தான்
1. முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா வின் மகன் துஷ்யந்த் சிங் மக்களவை உறுப்பினர் ஆவார். அத்துடன் அவருடைய சகோதரி யசோதரா மத்திய பிரதேச தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அவருடைய நெருங்கிய உறவினரான ஜோதித்ராத்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும் ஆவார்.
டில்லி
முன்னாள் டில்லி முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் உள்ளிட்ட பலரும் அரசியலில் உள்ளனர்.
அரியானா
வெளியுறவுத் துறை அமைசரான சுஷ்மா ஸ்வராஜ் சகோதரி அரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் மிசோரம் மாநில ஆளுநராக 1990 முதல் 1993 வரை பதவி வகித்துள்ளார்.
தமிழ்நாடு
பாஜகவின் தேசிய பெண்கள் பிரிவு செயலாளர் லலிதா குமாரமங்கலம் மோகன் குமாரமங்கலத்தின் மகளும் பாஜக முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரலிங்கத்தின் சகோதரியும் ஆவார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் போல் மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசியல் வாரிசுகள் உள்ளனர்.