ஜம்மு:
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாங்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறோம் என காஷ்மீர் பண்டிட் என்று அழைக்கப்படும் காஷ்மீர் பிராமணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மத்தியில் பாஜக ஆட்சி நிறைவுபெறும் தருவாயில், காஷ்மீர் பிராமணர்களுக்கு மோடி அரசு என்னதான் செய்தது என்பதை தெரிந்து கொள்ள, இந்தியா டுடே தொலைக் காட்சி கள ஆய்வு நடத்தியது.
விரட்டியடிக்கப்பட்ட காஷ்மீர் பிராமணர்கள் மீண்டும் அதே கவுரவத்துடன் முன்னோர்கள் வாழ்ந்த பள்ளத்தாக்குப் பகுதிகளிலேயே வாழ வழி ஏற்படுத்தித் தரப்படும் என 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
1.5 லட்சம் காஷ்மீர் பிராமணர்கள் வலுக்கட்டாயமாக பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அவர்களது இளம் தலைமுறையினருக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
5 ஆண்டுகள் முடிந்த நிலையில், பாஜக அரசு நம்மை மறந்துவிட்டது என்றே இளம் தலைமுறையினர் எண்ணுகின்றனர்.
எனினும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத் துறைக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு 2 மனுக்கள் அனுப்பியுள்ளோம் என்று இந்தியா டுடே தொலைக் காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.