கதாடா, குஜராத்
குஜராத் மாநில இரு பாஜக அமைச்சர்கள் பேய் ஓட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்ட வீடியோ வெளியானதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேய் ஓட்டுவது என்னும் நிகழ்வு கிராமப் புறங்களில் சகஜமாக இருந்த போதிலும் அதில் நம்பிக்கை உள்ளவர்களே அதை அதிகம் விரும்புவதில்லை. மாந்திரிகம், சூனியம் போன்றவைகளையும் பொதுமக்கள் பலர் எதிர்த்து வருகின்றனர். பகுத்தறிவு வாதிகள் இதை மூட நம்பிக்கை என சொல்லி வருகையில் பல ஆத்திக வாதிகள் சூனியத்தை சமூக விரோதம் என கருத்து கூறி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் போதாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது கதாடா. இங்கு உள்ளூர் பாஜக சார்பில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் அந்த பகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் குஜராத் மாநில சமூக நீதித்துறை அமைச்சருமான ஆத்மாராம் பர்மார் கலந்துக் கொண்டுள்ளார். அவருடன் கல்வித்துறை அமைச்சரான புபேந்திரசிங் சுதாசாமாவும் கலந்துக் கொண்டுள்ளார்.
அந்த நிகழ்வில் பேய் ஓட்டும் மந்திரவாதிகள் இருவர் ஒருவரை ஒருவர் சங்கிலியால் அடித்துக் கொண்டுள்ளனர் அப்போது இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப சங்கிலிகளால அடித்துக் கொண்டபடியே நடனம் ஆடி உள்ளனர். இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பேய் ஓட்டுபவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அமைச்சர்களிடம் கை குலுக்கு வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு வீடியோ பதிவாகி வைரலாகியது. இந்த பேயோட்டும் நிகழ்வில் அமைச்சர்கள் கலந்துக் கொண்டது மக்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, “இந்த நிகழ்வில் பாஜக அமைச்சர்கள் கலந்துக் கொண்டது அவமானத்துக்குறியது. இது மூட நம்பிக்கையை வளர்க்கும் செயலாகும். ஆகவே முதல்வர் விஜய் ரூபானி இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.
இது குறித்து அமைச்சர் சுதாசாமா, “அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் கடவுளின் பக்தர்கள். சக்தி உபாசகர்கள். சூனியக்காரர்கள் கிடையாது. கடவுளின் பக்தர்கள் சமுதாயத்தில் வசிக்கக் கூடாதா? பொது வாழ்வில் உள்ள நாம் பலதரப்பட்ட மக்களையும் சந்திக்க வேண்டி உள்ளது.
ஒரு பகுதியில் உள்ள மக்கள் மற்ற பகுதியினரை சந்திக்கக் கூடாதா? சக்தி உபாசகர்கள் நாடெங்கும் உள்ளனர். அவர்கள் குஜராத்தில் உள்ள சக்தி உபாசகர்கள்உடன் சேர்ந்து இந்த நிகழ்வை நடத்தினர்.
அரசியலில் இருக்கும் நம்மை போன்றவர்கள் அனைத்து தரப்பினரையும் தேர்தல் நேரத்தில் சந்திக்கும் போது மற்ற நேரங்களில் ஏன் சந்திக்கக் கூடாது? ”என கேள்விகள் எழுப்பி உள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=DnmqVwgaaKU]