புதுடெல்லி:

2022-ல் மனிதர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில், அனுபவமுள்ள விமான ஓட்டிகளே பெருமளவு தேர்வு செய்யப்படுவர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி கே.சிவன் தெரிவித்துள்ளார்.


புதுடெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ”2022-ல் முதன்முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் ஆளில்லாத விண்வெளி விமானம் ‘ககன்யான்’ 2020 டிசம்பரிலும், இரண்டாவது ஆளில்லாத விமானம் 2021 ஜுலை மாதமும், இறுதியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2022 டிசம்பர் மாதமும் செயல்படுத்தப்படும்.

மனிதர்களுடன் விண்வெளிக்கு செல்லும் முதல் விமானத்தில் செல்ல அனுபவம் வாய்ந்த விமான ஓட்டிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்திய விமானப்படை மற்றும் ஏனைய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்” என்றார்.

2022- 3 மனிதர்களுடன் விண்வெளிக்கு செலுத்தப்படும் ‘கங்கன்யான்’ குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பில், “இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த  திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் முக்கிய பங்காற்றப் போகிறது” என்று தெரிவித்திருந்தார்.