மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் குமாருக்கு கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் குவிந்தன.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழனன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 848 காளைகளும், 1,400 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து பச்சைக் கொடி காட்டி போட்டியை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, வாடிவாசல் வழியாக வரிசையாக காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 100 பேர் கொண்ட குழுவாக மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
சில காளைகளின் திமிலைப் பிடித்து வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல், அடக்க வருவோரை கொம்பால் தூக்கி எறிந்தன.
இதில் 14 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
விதிமுறைகளை மீறியவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தேசிய விலங்குகள் நல வாரியக் குழுவினர் நேரிடையாக போட்டியைக் கண்காணித்து ஆலோசனைகளை வழங்கினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்ற இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
இவருக்கு கார் மற்றும் பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.