டில்லி
நாளை சென்னை வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வருடம் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். தற்போது அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவருடைய தொடையில் உள்ள திசுவில் கேன்சர் கட்டி உள்ளதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள அவர் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனால் அருண் ஜெட்லியின் பொறுப்புக்கள் மற்றொரு மத்திய அமைச்சரான பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பியூஷ் கோயல் இந்த ஆண்டு நடைபெற உள பாராளுமன்ற தேர்தலின் தமிழக பாஜக பொறுப்பாளராக உள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக வுடன் விவாதிக்க இன்று அவர் சென்னை வர இருந்தார். அத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அவர் சந்திப்பதாக இருந்தார். தற்போது பியூஷுக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டதால் அவருடைய பயனம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பியூஷ் கோயல் ஞாயிறு அன்று சென்னை வந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளி நாடு சென்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்ல உள்ளார்.
எனவே பியூஷ் கோயல் ஞாயிறு அன்று முதல்வர் எடப்[பாடி பழனிச்சாமியை மட்டும் சந்திக்க உள்ளார் எனவும் அடுத்த முறை வரும்போது மீதமுள்ள கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.