பரேலி, உத்திரப்பிரதேசம்
உத்திரப் பிரதேசத்தில் கால்நடைகள் காப்பகத்தை உடைத்துக் கொண்டு ஓடிய மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள் கொல்வது தடை செய்யப் பட்டுள்ளது. ஆகவே வயதான மற்றும் கவனிக்க முடியாத மாடுகளை மக்கள் ஆதரவின்றி தெருவில் அலைய விட்டு விடுகின்றனர். அந்த மாடுகள் விளைநிலங்களில் புகுந்து மேய்ந்து விடுவதால் அலிகார் பகுதியில் அந்த மாடுகளை விவசாயிகள் பள்ளிக் கட்டிடத்தில் அடைத்தனர். அத்துடன் ஆதரவற்ற மாடுகளை காப்பகத்துக்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ந்தன.
இதை ஒட்டி உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து கால்நடைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்ட காப்பகத்துக்குள்ளேயே அடைத்து வைக்கப்படவேண்டும் என உத்தரவிட்டார். இதற்கான கெடுவாக இந்த மாதம் 11 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவித்தார். அதை ஒட்டி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஊர்களிலும் தற்காலிக கால்நடைகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பாதோன் மாவட்டத்தில் பரேலியின் அருகில் உள்ள பில்சி என்னும் சிறிய நகரில் ஒரு தற்காலிக காப்பகம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து ஒரு காளை மாடு காப்பகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறியது. அப்போது அங்கு இருந்த ஐந்தாம் வகுப்பு மாணவனான தரம்வீர் என்னும் 13 வயது சிறுவனை முட்டியதில் சிறுவன் மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் உள்ளே அமைந்துள்ள இந்த கால்நடைகள் காப்பகத்தை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என அவர்கள் மாவட்ட நீதிபதியின் முன்பு போராட்டம் நடத்தினர். அதை ஒட்டி அந்த கால்நடைகள் காப்பகத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.