புதுடெல்லி:

சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டனர்.

இதனையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவுக்கு பதிலாக, தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலோக் குமார் வர்மாவை மீண்டும் அதே பதவியில் நீடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை கூடியது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான உயர் மட்டக் குழு, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக்கூறி, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கியது.

இதனையடுத்து அலோக் குமார் வர்மா பதவியை ராஜினாமா செய்தார். நாகேஸ்வரராவ் மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி, “ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அலோக் குமார் வர்மாவிடம் விளக்கம் கேட்காமல், தன்னிச்சையாக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். உயர் மட்டக்குழுவைப் பற்றி எனக்கு நன்று தெரியும். அதன் செயல்பாடும் தெரியும்” என்றார்.