டில்லி:
மோடி அரசின் கடைசி குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடி அரசின் டிஜிட்டல் மயம், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விவசாயிகள் நலன் மீது கண்டு கொள்ளாமை போன்ற காரணங்களால் மக்கள் பாரதியஜனதாஅரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதனால் கலக்கத்தில் உள்ள மோடி அரசு, தாக்கல் செய்யப்ட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் வாக்குகளை பெறும் நோக்கில் பல்வேறு சலுகைகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் நடப்பு ஆட்சி காலத்திற்கான கடைசி பட்ஜெட் அடுத்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஃபிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கி ஃபிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மோடி அரசுக்கு இதுவே கடைசி இடைக்கால பட்ஜெட். அதைத்தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் விவசாய கடன், வருமான வரி வரம்பு உயர்வு உள்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.