சபரிமலை:
சபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவர் பலியானார்.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காகடிசம்பர் 30ந்தேதி நடை திறக்கப்பட்டது.. லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.
பொங்கல் நாளான ஜனவரி 14ந்தேதி மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
முன்னதாக ஜனவரி 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும். அதையடுத்து ஜனவரி 12ந்தேதி மகர விளக்கு அன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
பின்னர் மகர விளக்கு தரிசனம் முடிந்ததும், ஜனவரி 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்படும்
சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாகபேட்டை துள்ளல் எனப்படும் வரலாற்று சிறப்பு மிக்க நடனம் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற பேட்டை துள்ளலில் சுமார் 19 அய்யப்ப பக்தர்கள் நடனமாடிக்கொண்டே கரிமலை பெரு வழிப்பாதை வழியாக எருமேலி வந்து சன்னிதானத்தை அடைந்தனர்.
இவர்கள் நேற்று இரவு அந்த பகுதியில் தங்கியிருந்த பகுதி அருகே காட்டு யானை தாக்குதல் நடத்தியது. . இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்ப பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு மமற்றொரு பகுதிக்கு ஓடினர். அப்போது யானையின் தந்தத்தால் 35 வயது மதிக்கத்தக்க பரமசிவம் என்ற பக்தர் தாக்கப்பட்டார்.
அவரை உடனடியாக அய்யப்பா சேவா சங்கத்தினர் மட்டும் வனத்துறை அதிகாரிகள் மீட்டு முன்டக்காயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் இறந்து விட்டதாக கூறப்பட்டது. பலியான பரமசிவம் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பலியான சேலம் பரமசிவம் சேலம் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் என்றும், அவருக்கு இந்திராணி என்ற மனைவுயும், கோகுல், சஞ்சீவன் என்ற இரு மகன்களும், யாழினி என்ற பெண் குழந்தையும் உள்ளது.
பேட்ட துள்ளல் நிகழ்வின்போது யானை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற விழா காலங்களில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், காட்டுப்பகுதி என்பதால் தவிர்க்க முடியாத நிலையில் யானையின் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
மகரஜோதி விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.