டில்லி:
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்தியஅரசு அறிவுறுத்தியதை ரத்து செய்த உச்சநீதி மன்றம், அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக செயல்படலாம் என நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் 77 நாட்களுக்கு பிறகு மீண்டும் சிபிஐ அலுவலகம் வந்தார் அலோக் வர்மா.
நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐ-ல் இயக்குனருக்கும் சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்டு வந்த பனிப்போர் காரணமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி வழக்கு தொடர்பாக, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ அதிகாரிகள் மீதே சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில்அலோக் வர்மா லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா கேபினட் செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார் மனுக்களை அனுப்பினார்.
இதையடுத்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியே இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி இரவு உத்தரவிட்டது.
மத்திய அரசின் அறிவுறுத்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து, அலோக் வர்மா பணியில் தொடரலாம் என பச்சைக்கொடி காட்டினார்.
இந்த நிலையில், அலோக் வர்மான 77 நாட்களுக்கு பிறகு இன்று அலுவலகம் வந்தார். அலோக் வர்மாவின் பதவிக்காலம், வரும் 31-ம் தேதியோடு நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.