ஐதராபாத்
தெலுங்கானாவை சேர்ந்த 17 வயது மாணவி சர்ணிதா முதல் முறையே காட் தேர்வில் 95.95% மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
காட் என்னும் (காமன் அட்மிஷன் டெஸ்ட்) பொது நுழைவுத் தேர்வு எம் பி ஏ உள்ளிட்ட பல கல்விகளுக்காக நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வு மிகவும் கடினமானது என்பதால் இந்த தேர்வில் முதல் முறையே அதிக மதிப்பெண்கள் பெறுவது மிகவும் அரிதான ஒன்றாகும்.
இந்த தேர்வில் தெலுங்கானாவை சேர்ந்த சர்ணிதா என்னும் மாணவி முதல் முறையே 95.95% மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளார். இந்த மாணவி ஏற்கனவே பல சாதனைகள் புரிந்துள்ளார். இவர் தனது மூன்றாம் வயதில் கல்வி பயிலத் தொடங்கி 10 வயதில் 10ஆம் வகுப்பை 8 புள்ளிகளுடன் முடித்துள்ளார். அத்துடன் 12 ஆம் வகுப்பில் கணக்கு மற்றும் விஞ்ஞானப் பிரிவில் 10 புள்ளிகள் பெற்றுள்ளார்.
அதன் பிறகு அவர் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் அடிப்பை தனது 16 ஆம் வயதில் முடித்துள்ளார். இந்தியாவில் இவ்வளவு இளம் வயதில் பொறியியல் பட்டம் பெற்ற ஒரே மாணவர் என்னும் சாதனையும் படைத்துள்ளார். தற்போது இவர் பொது நுழைவுத் தேர்வான காட் தேர்விலும் மற்றொரு சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.