ஜெய்ப்பூர்
காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் துயர் தீர்க்க முழு அளவில் முயற்சிகளை மேற்கொள்ளும் என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்கிறார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அவர் கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்வு இது என்பதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று துணை முதல்வர் சச்சின் பைலட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சச்சின் பைலட், “விவசாயிகள் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்வதில் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர். வர உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு இது ஒரு முக்கிய நிகழ்வாக எதிர்பார்க்கப்படுகிறது.
விரக்தி அடைந்திருந்த விவசாயிகள் காங்கிரஸ் அரசு அறிவித்த கடன் தள்ளுபடியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முந்தைய முதல்வர் வசுந்தர ராஜே விவசாயிகள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு கடன் தள்ளுபடி செய்ய உள்ளதாகவும் இலவச மின்சாரம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது விவசாயிகளின் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளது. இது பிரம்மாண்டமான பேரணியாக அமையும். இந்த பேரணியில் மத்திய அரசு விவசாயிகள் நலனுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை விவரமாக எடுத்துக் கூற உள்ளோம். காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு ஆதரவானது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமே கடன் தள்ளுபடி முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அதையே பாஜக ஆளும் மாநிலங்களும் பின்பற்றின. மத்திய அரசு இதுவரை எவ்வளவு கடன் தள்ளுபடி அளித்துள்ளது? காங்கிரஸ் கட்சி மட்டுமே முழு அளவில் விவசாயிகளை ஆதரிக்கிறது” என தெரிவித்தார்.