திருவனந்தபுரம்

தேசிய அளவிலான இரு நாள் வேலை நிறுத்தம் கதவடைப்பாக மாறியதால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இரு தின வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.   இதில் அரசு ஊழியர், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் கலந்துக் கொள்வதாக அறிவித்தன.  இது கேரள மாநிலத்தில் கதவடைப்பாக மாறலாம் என அஞ்சப்பட்டது.

அதை ஒட்டி கேரள மாநில காவல்துறை இயக்குனர் லோக்நாத் பெஹரா இந்த வேலை நிறுத்தத்தை கதவடைப்பாக மாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.   ஆயினும் மாநிலம் முழுவதும் பல வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.   தனியார் பேருந்துகள் ஓடவில்லை.  இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களுக்கு ரெயில்வே சேவை பாதிப்பு அடைந்தது.  ஜன்சதாப்தி மற்றும் ரப்தி சாகர் விரைவு ரெயில்கள் நிறுத்தப்பட்டன.  சென்னை மெயில் திருப்புனித்துராவில் தடுத்து நிறுத்தப்பட்டது.   சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் வேனாடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக கிளம்பின.