திருவனந்த புரம்
கதவடைப்பு உள்ளிட்ட போராட்டங்களின் போது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் தண்டனை அளிக்க சுட்டம் இயற்றப்பட உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கதவடைப்பு, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் அரசு வாகனங்கள், மற்றும் அரசு அலுவலகங்களை சேதப்படுத்தினால் தண்டனை வழங்க அனைத்து மாநிலங்களிலும் சட்டம் உள்ளது. ஆனால் இது போன்ற போராட்டங்களின் போது பல தனியார் சொத்துக்களும் சேதமடைகிறது. இதற்கான இழப்பீட்டை அவர்கள் பெற முடியாத நிலை உள்ளது.
நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன், “கடந்த 1984 ஆன் வருட சட்டப்படி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்து வோருக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்டத்தில் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துவோர் குறித்து எதுவும் இல்லை, அதை ஒட்டி கேரள அமைச்சரவை புதிய சட்ட மசோதா ஒன்றை இயற்றி உள்ளது.
அதன்படி கதவடைப்பு உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் தனியார் சொத்துக்களை சேதப்ப்டுத்துவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப் பட உள்ளது. அத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்த்துவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட உள்ளது.
இந்த சட்ட மசோதா கேரள ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த உடன் இந்த சட்டம் விரைவில் அமுலுக்கு வர உள்ளது. இதன் மூலம் அரசியல், சமூகம், மதம் உள்ளிட்ட எந்த போராட்டத்திலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்வது தவிர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.