லிகார்

லிகார் நகரில் உள்ள பன்னாதேவி காவல்நிலைய ஆய்வாளர் ஜாவேத் கான் என்னும் இஸ்லாமியர் ஆதரவற்ற பசுவையும் கன்றையும் பராமரித்து வருகிறார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று விடப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   இவ்வாறு விடப்படும் கால்நடைகள் பயிரை மேய்ந்ததால் அவற்றை அலிகார் பகுதியில் விவசாயிகள் பள்ளியில் அடைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்தது தெரிந்ததே.   அது மட்டுமின்றி பசுக்களின் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பசுக்களை வெட்டுவதற்கு கொண்டு செல்வதாக நினைத்து மக்கள் வழி மறித்த நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆதரவற்று விடப்படும் பசுக்களை காக்க பல  பசு பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.    அலிகார் நகர காவல்துறை அதிகாரி ஆதரவற்று விடப்படும் பசுக்களையும் கன்றுகளையும் மக்கள் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.   இந்த கோரிக்கை அலிகாரில் பன்னாதேவி காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரியும் ஜாவேத் கான் மனதை மிகவும் கவர்ந்தது.

சுமார் 47 வயதான ஜாவேத்கான் உளவியலில் பட்டமேற்படிப்பு படித்தவர்.   அவர் அந்த பகுதியில் ஆதரவற்று விடப்பட்ட ஒரு பசுவையும் கன்றையும் காவல் நிலையத்தில் வைத்து பராமரிக்க தொடங்கினார்.   இந்த கால்நடைகளுக்காக தனது சொந்தப் பணத்தில் தீவனங்கள் அளித்து வருகிறார்.   அத்துடன் வாழ்நாள் முழுவதும் உழைத்த பசுக்களை வயதான காலத்தில் ஆதரவற்று விடக்கூடாது எனமக்களுக்கு ஜாவேத்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசுக்களை கொல்வதாக இஸ்லாமியர்கள் மீது பலரும் புகார் கூறி வரும் வேளையில் ஒரு இஸ்லாமிய காவல் அதிகாரி பசுக்களை பாதுகாத்து வருவது அங்குள்ள மக்கள் மனதை கவர்ந்துள்ளது.