பம்பை:
பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலுக்குள் பக்தர்களின் எதிர்ப்பை மீறி 2 பெண்கள் கேரள அரசு புறவாசல் வழியாக அழைத்துச் சென்ற நிலையில், நேற்று இலங்கையை சேர்ந்த 46 வயது பெண் பக்தர் ஒருவர் காவல்துறை பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்றுள்ளார். இதன் காரணமாக கேரளாவில் மேலும் பதற்றம் நீடித்து வருகிறது.
உச்சநீதி மன்ற அனுமதியை தொடர்ந்து இளம்பெண்கள் பலர் சபரிமலை அய்யப்பன் கோவி லுக்குள் செல்ல முயற்சி செய்து வந்தனர். ஆனால், பக்தர்கள், தந்திரிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கனகதுர்கா (44), பிந்து(42) என்ற 2 பெண்களை காவல்துறையினர் கோவிலின் புறவாசல் வழியாக அழைத்துச் சென்று அதிகாலை 3.30 மணி அளவில் தரிசனம் செய்ய வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கேரளாவில் பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் காவல்துறை பாதுகாப்புடன் இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் சபரிமலை சென்றுள்ளார். அவர் தான் மாதவிடாய் காலத்தை கடந்து விட்டதாக மருத்துவ சான்றிதழுடன் சபரிமலை வந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் பம்பையில் உள்ள முகாமிற்கு திரும்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர்குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின் மீண்டும்
காவலர்கள் உதவியுடன் சன்னிதானம் அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால், சசிகலாவோ தன்னை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதன் காரணமாக கேரளாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது.
Thanks: The News Minute (video)