டில்லி

தெற்கு டில்லியில் நடந்த ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு பெண் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

தெற்கு டில்லியில் உள்ள ஒரு பண்னை வீட்டில் நேற்று முன் தினம் புத்தாண்டு விருந்துக் கொண்டாட்டம் நிகழ்ந்துள்ளது. அந்த விருந்தில் அர்ச்சனா குப்தா என்னும் 45 வயதான ஒரு பெண் ஆர்கிடெக்ட் கலந்துக் கொண்டுள்ளார். அவருக்கு அப்போது துப்பாக்கி குண்டடி பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் அங்கு வந்த போது அந்த பெண்ணின் கணவர் விகாஸ் குப்தா அந்த பண்ணை வீட்டில் நடந்த விருந்துக்கு அவரும் அவர் மனைவியும் சென்றிருந்த போது துப்பாக்கி சூடு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அந்த விருந்தை பிகார் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜு சிங் அவர் சகோதரரக்ளுடன் இணைந்து அளித்துள்ளார்.

அந்த புத்தாண்டுவிருந்தின் போது சுமார் 12 மணிக்கு இரண்டு அல்லது மூன்று முறை துப்பாக்கி வெடித்த சப்தம் வந்ததாகவும் அதன் பிறகு அர்ச்சனா தலையில் குண்டடி பட்ட காயத்துடன் விழுந்திருந்ததை தாம் பார்த்த்தாகவும் விகாஸ் குப்தா தெரிவித்துள்ளார். அவர்களை அந்த விருந்துக்கு ராஜு சிங் கின் அண்ணன் அழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விகாஸ் குப்தா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜு சிங்கை கைது செய்ய பண்ணை வீட்டுக்கு விரைந்தனர்.

பீகார் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ராஜு சிங் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2015 முதல் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது அவரும் அவரது ஓட்டுனரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். காவல்துறை அவர்களை தீவிரமாக தேடி வருகிறது. அந்த பண்ணை வீட்டில் இருந்த மற்றவர்களை கைது செய்து விசாரித்து வருகிறது.